கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஊட்டி: வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

ஊட்டியில் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் சமீபகாலமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கரடிகள், சிறுத்தைகள், யானைகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி உலா வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூரில் வீட்டுக்குகள் புகுந்து முதியவரையும், ஊட்டியில் மூதாட்டியையும் சிறுத்தைகள் தாக்கின. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேத்தி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது.

இந்த நிலையில் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் இரவில் சிறுத்தை உலா வந்தது. அங்கு ஒரு வீட்டின் வெளியே காவல் காத்துக்கொண்டிருந்த வளர்ப்பு நாயை, பாய்ந்து வந்த சிறுத்தை கழுத்தை கவ்வி வேட்டையாடியது. சிறிது நேரத்துக்கு பிறகு சிறுத்தை அங்கிருந்து சென்று விட்டது. மேலும் சிறுத்தை நாயை வேட்டையாடி சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் மட்டுமே வனவிலங்குகள் வந்த நிலையில், தற்போது நகர்ப்புறங்களிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வளர்ப்பு நாய்கள் கிடைக்காத சமயத்தில், மனிதர்களை சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.