மேட்டுப்பாளையம்,
மண்சரிவால் சேதமடைந்த மலைரெயில் பாதையை 7-வது நாளாக சீரமைக்கும் பணி நடைபெற்றது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 23-ந் தேதி இரவு கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதில் ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததுடன், மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. மேலும் ரெயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை கடந்த 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 6 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மலைரெயில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்று வந்தது. இந்த நிலையில் மீண்டும் மழை காரணமாக அடர்லி-ஹில்கு ரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும். பணி முடிவடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மீண்டும் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் குன்னூர் மலை ரெயில் இருப்பு பாதை பிரிவு பொறியாளர் குமார் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நேற்று 7-வது நாளாக மலைரெயில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாள பாதை சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றபிறகு மலைரெயில் சேவை தொடங்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.