நீலகிரி
தொடர் கனமழை எதிரொலியாக திடீர் மண் சரிவு ஏற்பட்டு, உதகை மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த மலை ரெயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற இந்த மலை ரெயிலில் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையே பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, என்ஜினீயர் தலைமையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 14 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. இதனையடுத்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.