நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரையொட்டி தொட்ட பெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக கரடி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. சமீப நாட்களாக இரவில் உலா வரும் சிறுத்தைகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி கீழ் தலையாட்டுமந்து பகுதியில் விசாலாட்சி (வயது 75) என்பவரது வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது. வீட்டுக்குள் வளர்ப்பு நாய் இருந்ததை பார்த்த சிறுத்தை, அதை வேட்டையாட முயற்சி செய்தது. அப்போது சிறுத்தையிடம் இருந்து நாய் குரைத்தவாறு தப்பித்தது.
மூதாட்டியை தாக்கியது
நாயை வேட்டையாட முடியாததால் திடீரென ஆக்ரோஷம் அடைந்த சிறுத்தை, கட்டிலில் தூங்கி கொண்டிருந்த விசாலாட்சியை தாக்கியது. இதனால் அச்சமடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக் கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் சிறுத்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மூதாட்டியை மீட்டு வெளியே அழைத்து வந்த மக்கள், சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து கதவை பூட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மின் விளக்குகளை அணைத்து விட்டு, கதவை திறந்து விட்டனர். அப்போது வீட்டுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்த சிறுத்தை, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடியது.
வனத்துறை ரோந்து
சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்த விசாலாட்சி ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை உலா வந்த கீழ் தலையாட்டுமந்து பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வீட் டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கிய சிறுத்தையை நாங்கள் வீட்டுக்குள் பூட்டி வைத்தோம். அந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்திருக்க வேண்டும். திறந்து விட்டதால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம் என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.