தமிழக செய்திகள்

‘அரசியல் விளம்பரத்திற்காக அணையை திறந்து மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதா?’ - தங்கம் தென்னரசு கேள்வி

முன்னறிவிப்பு இல்லாமல், அணையைத் திறப்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறியமாட்டார்களா? என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகளுக்கே தெரியாமல் த.வெ.க. நிர்வாகிகள் திறந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என முன்னாள் அமைச்சரும், திருச்சுழி எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

சோத்துப்பாறை அணை

“தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் த.வெ.க.வினர் தன்னிச்சையாகத் திறந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பொறுப்பற்ற செயல்...

நீர்வளத்துறை அதிகாரிகளுக்கே தெரியாமல், அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அணையைத் திறப்பது என்பது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்ற செயல் என்பதை அறியமாட்டார்களா?

அபாயகரமான நிலை

அரசியல் விளம்பரத்திற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்லவா? தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அணை ஒன்றின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அபாயகரமான நிலைக்குக் காரணமானவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT