சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்படும் 717 மதுபான கடைகளை (டாஸ்மார்க்) இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எனது தலைமையில் பல கட்ட போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் நடத்தி உள்ளேன். தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. அதற்காக தமிழக அரசிடம் நீண்ட நாட்களாக நான் கோரிக்கை வைத்து வருகிறேன். அந்த எண்ணங்களை ஈடு செய்யும் வகையில் ஒரு நல்ல தொடக்கமாக தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்ற மதுபான கடைகளில், வழிபாட்டு தலங்கள் அருகில் 276 மது கடைகளும், கல்வி நிறுவனங்கள் அருகில் 186 மது கடைகளும், பேருந்து நிலையம் அருகில் 255 மதுபான கடைகளும் சேர்த்து மொத்தம் 717 மதுபான கடைகளை இரண்டு வார காலங்களில் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது.
பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக இருந்த இந்த கோரிக்கையை கொண்டு நான் பலமுறை கோரிக்கை வைத்து அறிக்கைகளையும் அளித்து உள்ளேன். அவைகளை தொடர்ந்து தற்போது பள்ளி மாணவர்களின் நலனை பேணும் பொருட்டும் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி சமூக நலன் கருதி 717 டாஸ்மார்க் நிறுவனம் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோல் தமிழகம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு, திறந்து இருக்கும் நேரத்தை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவரது இந்த ஐந்து ஆண்டு ஆட்சிக்குள் தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வந்து ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் செய்வார் என்பதற்கு இது ஒரு நல்ல தொடக்கத்திற்கான வழியாக நான் கருதுகிறேன். 717 மதுபான கடைகளை மூடியதற்கு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.