தமிழக செய்திகள்

நெல்லை ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை 30-ந்தேதிக்குள் முடிக்க உத்தரவு

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் (யார்டு) மேம்பாட்டு பணிகள் கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நெல்லை,

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை வருகிற 30-ந்தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

மேம்பாட்டு பணிகள்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் (யார்டு) மேம்பாட்டு பணிகள் கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இங்கு 6-வதாக புதிய பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு உள்ளது. இதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனுடனும் மற்ற தண்டவாளங்களை இணைக்கும் பணியும் நடைபெறுகிறது.

கோட்ட மேலாளர் ஆய்வு

இந்த நிலையில் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா நேற்று நெல்லை சந்திப்புக்கு வந்தார். அவர் ஒவ்வொரு பிளாட்பாரமாக சென்று ரெயில்வே தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிக்னல் இணைப்புகள், இதன் மூலம் நெல்லை சந்திப்புக்குள் ரெயில்களை வரவழைத்து, வெளியே அனுப்பும் பணிகள் எவ்வாறு நடைபெறும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

6-வது நடைமேடை

மேலும் 6-வது நடைமேடையில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்றும் பார்வையிட்டார். பின்னர், இந்த பணிகளால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டு உள்ளது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளையும் வருகிற 30-ந்தேதிக்குள் முடித்து ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.