சென்னை,
யானை
தேனியைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு தான் வாங்கிய லலிதா என்ற பெண் யானைக்கு உரிமைதாரர் சான்று வழங்கக்கோரி முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து. ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தார். அதேநேரம், யானையைத் தொடர்ந்து ஷேக் முகமதுவின் கட் டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று உத்தரவிட்டார்.
ஒப்படைக்கவேண்டும்
இந்தநிலையில், யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த தனி நீதிபதி, யானையை மாவட்ட வன அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், தனிநபர்கள் ஆகியோரிடம் உள்ள யானைகளை அரசு யானைகள் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றவேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ரத்து
இந்த மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், "மனுதாரர் அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில் யானைகளை, மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும்படி உத்தரவிட முடியாது.
அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு கோவில்கள் தரப்பு வாதங்களைக் கேட்கவில்லை. தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகள், கோவில்களில் யானைகளைப் வளர்க்கவும், பராமரிக்கவும் அனுமதித்துள்ளது. விதிகளுக்கு முரணாக தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, கோவில் யானைகளை அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.