தமிழக செய்திகள்

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை - தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவு

குழந்தைகள் அடையாளத்தை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை,

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாக கருதி, குற்றவாளி சிறையில் மீதி காலத்தை கழிப்பதை கோர்ட்டு விரும்பவில்லை என நீதிபதி கூறியுள்ளார்.

நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் குழந்தைகள் அடையாளத்தை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 2023-ம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.

கைது

இந்த கொடூர சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டினார். இதனால் பயந்து போன சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இதை கவனித்த பெற்றோர்கள் அவர்களிடம் அன்பாக விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூக்கு தண்டனை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.