தமிழக செய்திகள்

ஆர்டர்லி முறை; புகார்கள் குறித்து கலெக்டர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்டர்லி விவகாரத்தில் உயர் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டால், கடுமையான குற்றமாக கருத வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரிகள் வீட்டில் போலீஸ்காரர்கள் ஆர்டர்லியாக வேலை செய்யும் நடைமுறைக்கு எதிராக தாமாக முன்வந்து ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஆர்டர்லி நடைமுறை தொடர்பாக வரும் புகார்கள் மீது அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டால், கடுமையான குற்றமாக கருதப்பட வேண்டும்.

மேலும், ஆர்டர்லி முறையை ஒழிக்கும் கொள்கையை அமல்படுத்தவில்லை என்றால், மாவட்ட கலெக்டர்கள் மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.