கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் பள்ளி ஆசிரியரை மிரட்டி ரூ.99 ஆயிரம் பறிப்பு

ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்,

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் பள்ளி ஆசிரியரை மிரட்டி ரூ.99 ஆயிரம் பறித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையை அடுத்த வடவள்ளி பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்போன் செயலி மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன் (22 வயது) என்பவர் அறிமுகமானார். அவர் மூலம் சண்முகராஜ் (25 வயது), வினோத்குமார் (32 வயது), முத்துகுமார் (23 வயது), முகேஷ்குமார் (20 வயது) ஆகியோரும் அந்த ஆசிரியருக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் செயலி மூலம் அடிக்கடி பேசிக்கொண்டனர். மேலும் செல்போன் எண்களை பறிமாறி பேசி வந்தனர். அப்போது அவர்களிடம், ஆசிரியர் ஓரினச்சேர்க்கை தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள், கோவையில் இருப்பதாகவும், நீங்கள் வடவள்ளி அருகே உள்ள இடத்துக்கு வந்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம் என்றும் ஆசிரியரிடம் கூறினர்.

அதை நம்பி அவர் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 பேரும் ஆசிரியரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் திடீரென்று ஆசிரியரை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஆசிரியரிடம் இருந்த செல்போனை பறித்து ஜிபே மூலம் ரூ.99 ஆயிரத்தை தங்களின் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT