முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் 
தமிழக செய்திகள்

மக்களின் முகமலர்ச்சியில் எங்கள் வெற்றி தெரிகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி

தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது மக்களின் முகமலர்ச்சியில் தெரிவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று, அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார்.

சிறப்பு பேட்டி

கடிகார முள் போல 24 மணி நேரமும் ஓய்வின்றி சுற்றி வரும் இந்த பரபரப்பான சூழலிலும் மு.க.ஸ்டாலின் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

முதல் கையெழுத்து

கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நீங்கள் முதல்-அமைச்சராக போடும் முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு இருக்கும்?.

பதில்:- மக்கள் மகிழக்கூடிய, மகளிர் மகிழக்கூடிய திட்டத்துக்குத்தான் என்னுடைய முதல் கையெழுத்து அமையும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

மக்கள் முகமலர்ச்சி

கேள்வி:- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நீங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். தற்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது? தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?

பதில்:- களநிலவரத்தை வைத்துத்தான் சொல்லிவருகிறேன். தேர்தல் பிரசாரம் தொடங்கி பாதி தமிழ்நாட்டை வலம் வந்த பிறகு 200 தொகுதியில் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கை வந்தது. இப்போது முழுமையாக முடித்துவிட்டேன். 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்றே நம்புகிறேன். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவந்துள்ள ஒவ்வொரு திட்டமும் அனைத்து வீட்டையும் அடைந்துள்ளது. திட்டங்களால் பயனடையாத மக்களே இல்லை. சாலையில் நடந்து வாக்கு கேட்டுப்போகும்போது, 'அடுத்து நீங்கதான்' என்று பொதுமக்கள் சொல்வதுதான் இன்றைய உண்மையான களநிலவரம். 40 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுக்க சுற்றுகிறேன். மக்களின் முகபாவனையை வைத்து என்னால் கணிக்க முடியும். கூட்டம் கூடுவது முக்கியமல்ல. கூடிய கூட்டம் எந்த அளவுக்கு நம்மை மலர்ச்சியோடு பார்க்கிறது என்பதை வைத்துத்தான் வெற்றி அமையும். அந்த வகையில் மலர்ச்சியோடு என்னை நோக்கி மக்கள் வருகிறார்கள். அதை வைத்துத்தான் சொல்கிறேன். தேர்தல் முடிவு, மக்களின் மகிழ்ச்சியில் தெரிகிறது.

போட்டியாக நினைக்கவில்லை

கேள்வி:- இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் எத்தனை போட்டி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? இருமுனை போட்டி என்றால் உங்களுக்கும், யாருக்கும் இடையே போட்டி?

பதில்:- யாரையும் எனக்கு போட்டியாக நினைக்கவில்லை. நாங்கள் வெல்வோம்.

ராகுல் காந்தி

கேள்வி:- 2021 சட்டமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டும் ராகுல்காந்தி அதை வரவேற்று எந்தவித கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. இது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தவில்லையா?

பதில்:- தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராகுல் காந்தியின் பேச்சுகளைப் பாருங்கள். “என் சகோதரர் ஸ்டாலினை யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்று பேசி வருகிறார், என் இனிய சகோதரர் ராகுல்காந்தி. இதைவிட பெரிய பாராட்டு வேண்டுமா?.

சாதனை

கேள்வி:- நாட்டில் கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதற்கு உங்களுடைய பதில் என்ன?

பதில்:- அவர் பதவியில் இருந்து இறங்கும்போது தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாகத்தானே வைத்து விட்டுப்போனார்? தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2011 முதல் 2021 வரைக்கும் தரை மட்டத்துக்கு இறக்கியது அ.தி.மு.க. ஆட்சி. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்தது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை எந்தெந்த வகையில் எல்லாம் சீரழித்தது என்பது அதில் உள்ளது. அத்தகைய நிலைமையில்தான் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார். இதில் இருந்து மீட்சியை உருவாக்கியதுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனையாகும்.

இன்றைக்கு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக மாறி வருகிறது. தொழில்கள் பெருகி இருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகமாகி இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் ஆகியிருக்கின்றன. புதிய புதிய திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்துக்கும் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது. அறிவிக்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகம். அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகள் அதிகம். அதனை பட்டியலிட்டு பார்க்கட்டும் எடப்பாடி பழனிசாமி. இத்தனைக்கும் மத்திய அரசின் ஓரவஞ்சனைக்கு மத்தியில் தான் இத்தனை திட்டங்களை தீட்டி வருகிறோம்.

தமிழ்நாட்டின் நிதி வளத்தை மொத்தமாக சுரண்டிக் கொழுக்கிறது மத்திய அரசு. ஜி.எஸ்.டி. வரி விதிப்பானது மாநில அரசின் பங்கை தட்டிப்பறிக்கும் காரியம் ஆகும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என்பதே மாநில அரசின் நிதிமூச்சுக்காற்றை நிறுத்தும் செயல்தான். இதனையும் தாக்குப் பிடித்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு 40 சதவீத நிதி தரும் மத்திய அரசானது தமிழ்நாட்டுக்கு 15 சதவீதம்தான் தருகிறது.

இதுவரை நடந்த இரண்டு இயற்கை பேரிடர்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். ஆனால் ரூ.776 கோடியை மட்டும் வழக்கமாக தரும் நிதியை மட்டும் கொடுத்துள்ளது மத்திய அரசு. பள்ளிக்கல்வித் திட்டத்துக்காக தரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவில்லை. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு மாநில அரசுதான் 60 சதவீத நிதியைத் தருகிறது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப் பணிகளுக்கான தொகையை தமிழ்நாடு அரசுதான் செய்து வருகிறது.

இப்படி, மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கே மாநில அரசுதான் செலவு செய்து நிறைவேற்றுகிறது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இருப்பது இல்லை. இத்தகைய சூழலில்தான் மாநில அரசை நடத்தி வருகிறோம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னணி மாநிலம்

கேள்வி:- மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி நடைபெற்றால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்று மத்திய மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் சொல்லி வருகிறார்களே...?

பதில்:- பா.ஜனதா ஆளும் மாநிலங்களை வளர்த்துவிட்டார்களா? தமிழ் நாட்டை விட எந்த மாநிலம், எதில் வளர்ந்துள்ளது?. எந்த மாநிலம் எதில் சிறந்து விளங்குகிறது?. பட்டியல் போட்டு சொல்லச் சொல்லுங்கள். பா.ஜனதாவின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. அதுதான் உண்மை. இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 2024-25 ஆகிய ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கிறது. தற்போது தமிழ்நாடு 11.19 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இதுதான் தமிழ்நாட்டின் வெற்றியாகும். இதைச்சொல்வது மத்திய அரசுதான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தமிழ்நாடு 9.4 சதவீத பங்களிப்பைச் செலுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த ஆண்டு மட்டும் ரூ.31.19 லட்சம் கோடி ஆகிவிட்டது. தொழில் துறையில் தமிழ்நாடு 14.75 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

சேவைத்துறையானது 11.3 சதவீத வளர்ச்சியை எட்டி இருக்கிறது. அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் இந்திய முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. மின்னணு சாதனங்கள், துணிகள், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. பொறியியல் எந்திர ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. ஏற்றுமதி ஆயத்த நிலை குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது. வணிகப்பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு ஆகி இருக்கிறது. கேழ்வரகு. கரும்பு விளைச்சலில் முதலிடத்தையும், எண்ணெய் வித்துகளில் இரண்டாம் இடத்தையும், நிலக்கடலை விளைச்சலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கல்வியிலும், சுகாதாரத்திலும் முன்னணி மாநிலமாக இருக்கிறது. வேறு என்ன வேண்டும்?

மக்கள் எங்கள் பக்கம்

கேள்வி:- எதிர்க்கட்சி கூட்டணியை அ.தி.மு.க. கூட்டணியாக பார்க்கிறீர்களா? தேசிய ஜனநாயக கூட்டணியாக பார்க்கிறீர்களா?

பதில்:- இந்த சண்டைக்கு அவர்களே இன்னும் தீர்வு காணவில்லை. இதில் நான் என்ன சொல்ல?

கேள்வி:- தி.மு.க. ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சன கணைகளை தொடுத்து வரும் நிலையில் மீண்டும் தி.மு.க.வை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நீங்கள் நம்புவது எதை வைத்து?

பதில்:- நீங்களே எதிர்க்கட்சிகள் என்று சொல்லி விட்டீர்கள். எதிர்க்கட்சிகள் அப்படித்தான் விமர்சிப்பார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்கள் சாதனைத் திட்டங்களை வைத்து எங்களைத்தான் மக்கள் உறுதியாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

கேள்வி:- நீங்கள் தீவிரமாக கட்சி பணியாற்றியதற்கு 'உழைப்பு என்றால் அது மு.க.ஸ்டாலின்தான்' என்று கருணாநிதி உங்களை உச்சிமுகர்ந்து பாராட்டினார். தற்போது நீங்கள் உங்களுடைய மகன் உதயநிதியின் கட்சி பணியை எப்படி பார்க்கிறீர்கள்? அவரை எப்படி பாராட்டுவீர்கள்?

பதில்:- கழகத்தினர் அனைவரும் முழு உழைப்பைக் கொடுத்துவருகின்றனர். அவரும் உழைப்புக்கு எடுத்துக்காட்டாகவே செயல்பட்டு வருகிறார். காலை முதல் இரவு வரை அவர் தொய்வில்லாமல், களைப்பு ஏற்படாமல், பிரசாரம் செய்வதைப் பார்த்து பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.