தமிழக செய்திகள்

வனப்பகுதியை விட்டு குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள்... பொதுமக்கள் அச்சம்!

வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்பு நோக்கி வரும் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகளுக்கு குரங்குகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

குரங்குகள் படையெடுப்பு

வாணாபுரம் அருகே பெருந்துறைப்பட்டு, பழையனூர், தச்சம்பட்டு, தென்கரும்பலூர் பகுதிகளில் காப்புக்காடுகள், 100-க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை குன்றுகள் மற்றும் வனப் பகுதிகள் அதிக அளவில் உள்ளது. இங்கு வன விலங்குகளான மான், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்டவை அதிக அளவில் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் பழையனூர் மலைப்பகுதிகளில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் அப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.

பயிர்கள் சேதம்

கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் அணிவகுத்து வாழவச்சனூர் நோக்கி சென்றன. சாலை வழியாக வந்து வாழவச்சனூர் செட்டித்தெரு பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் தென்னை மரத்தில் உள்ள தேங்காய், இளநீர் மற்றும் கொய்யா, மாதுளை சப்போட்டா, காய்களை பறித்து சேதம் ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி பொதுமக்களை துரத்தி, துரத்தி கடிக்க வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்பு நோக்கி வரும் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் அச்சம்

இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், விவசாயிகள், வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT