திருநெல்வேலி  
தமிழக செய்திகள்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானம்மாள் தலைமை தாங்கினார்.

திருநெல்வேலி,

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

கோரிக்கைகள்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்கப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் முழுவதும் 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் தகுதியான உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

சாலை மறியல் போராட்டம்

இந்த வாக்குறுதிகளை உடனடியாக புதியதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நிறைவேற்றக் கோரி நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே சுமார் 400 -க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை தாங்கினார்.

மேலும் சி.ஐ.டி.யு நெல்லை மாவட்டத் தலைவர் முருகன் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண் ஊழியர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

கைது

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஊழியர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும், ஊழியர்கள் கலைந்து செல்ல மறுத்துப் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால், மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைப் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் இன்று பெரும் பரபரப்பு நிலவியது.