ஐதராபாத்,
ஆட்டோ கவிழ்ந்து இரும்புக் குழாய்கள் சரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஸ்கூட்டரில் சென்ற நபர் பலியானார்.
தெலுங்கானா மாநிலம் ஷாபூரை சேர்ந்தவர் பிரகாஷ் பவார்(வயது 56). இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தங்க உருக்காலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பாலநகர் மேம்பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று அதிக அளவில் இரும்புக் குழாய்களை ஏற்றி வந்துள்ளது. பாலத்திற்கு அடியில் இருந்த வளைவில் திரும்பிய போது அதிக எடை காரணமாக ஆட்டோ நிலைத்தடுமாறி சரிந்தது. அதில் இருந்த இரும்புக் குழாய்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பிரகாஷ் பவார் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் உதவியுடன் இரும்பு குழாய்களளையும், வாகனங்களையும் அகற்றினர். பின்னர், இரும்புக் குழாய்களில் சிக்கி உயிரிழந்த பிரகாஷ் பவாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிக பாரம் ஏற்றி விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.