சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி மத்திய சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ சேவை மையம், 162 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க டெண்டர் கோரியது. இதில் 32 ஆலைகள்தான் தற்போது உற்பத்தி செய்கின்றன. மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் மற்ற ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயலற்று முடங்கி கிடக்கின்றன. ஒரு ஆக்சிஜன் ஆலை அமைக்க 45 நாட்கள்தான் தேவைப்படும். ஆனால் கடந்த 7 மாதங்களாக 165 ஆக்சிஜன் ஆலைகளிலும் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மடிகிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஏறத்தாழ 9,018 டன் ஆக்சிஜனை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருக்கிறது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் உயிருடன் மோடி அரசு, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பால் மனித உயிரிழப்பு பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று இந்திய அறிவியல் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.