தமிழக செய்திகள்

ப.சிதம்பரம் கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும், மத்திய புலனாய்வுத்துறையும் அவரது வீட்டில் புகுந்து வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நேர்மையற்ற பழிவாங்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்குவதற்கும் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ.க. அரசு சட்ட நியதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மூலம் பா.ஜ.க. அரசு வழக்குகள் தொடுத்துள்ளது. அவர் ஓடி ஒளியவோ, தலை மறைவாகவோ இல்லை. சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கடமையை நிறைவேற்றிடும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவில் அவருடைய வீட்டின் சுவர் ஏறி குதித்து, சிதம்பரம் ஏதோ ஒரு பயங்கரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்துகொண்டதை, நடுநிலையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதை ஜனநாயகவாதிகளும், அரசியல் சட்ட மாண்புகளை மதிப்போர்களும் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள். சிதம்பரம் சட்டப்படி இந்த பிரச்சினையை எதிர்கொள்வார் என்பது உறுதி. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவராக, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.

கூட்டம் முடிந்து கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த துரைமுருகனிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அப்போது, அவரிடம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர்.

அதற்கு, அவர் இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு எப்படி வாதாடி வெளியே வர வேண்டும் என்பது அவருக்கு (ப.சிதம்பரம்) தெரியும். இது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு தான். அவர் கைது செய்யப்பட்டதிலும் அரசியல் உள்நோக்கம் உள்ளது. எனவே இதை அரசியலாக தான் பார்க்க முடியும் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். அவர் உள்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதற்கு பழித்தீர்த்து கொள்வதற்காக அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் சி.பி.ஐ. புலனாய்வு துறையை ஏவி இந்த பழிவாங்கும் நடவடிக்கையை நடத்தி உள்ளனர்.

சி.பி.ஐ. தலைமை அதிகாரி, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் கூட்டு சதி, உச்சநீதிமன்றத்தின் துணையோடு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் மணி அரசன் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை