கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் பாஜகவை நிராகரித்த தமிழக வாக்காளர்களுக்கு பாராட்டு - பெ.சண்முகம்

மக்களின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தேர்தல் களத்தில் முறியடிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து பணியாற்றியது.

இந்தியா முழுவதும் மதவெறி வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுகிற பாஜக தமிழ்நாட்டிலும் அதிமுகவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றி விடக் கூடாது என்கிற அரசியல் உறுதிப்பாட்டுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் மட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்த அடிப்படையில் தமிழக வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்திருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் பத்மநாபபுரம், கீழ்வேளூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்த தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நன்றியினை உரித்தாக்குகிறது.

மேலும், இந்த வெற்றிக்காக பாடுபட்ட திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியின் நிர்வாகிகள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

17-வது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிபெரும் கட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மக்களின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.