கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்: மூடி வைத்து அரசு பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் குடோன்கள் அமைக்க உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் அரசின் திறந்தவெளி கிடங்குகளில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படாமல் மழை நீரில் நனைந்து முளையிட்டு வீணாவது தொடர்கதையாகி உள்ளது.

கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வேளாண் பெருமக்களால் கொண்டுவரப்பட்ட நெல் மணிகள், எப்படி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானதோ, அதேபோல் மாற்றம் கொண்டு வருவோம் என்று சொன்ன தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும், எந்த மாற்றமும் இல்லாமல் நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றன. நெல் கொள்முதல் கிடங்குகளுக்கு குடோன்கள் இல்லை என்றாலும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் கூட இல்லாத அவலம் தொடர்கிறது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜபுரம், விருதுநகர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பாதுகாப்பு மற்றும் தார்ப்பாய் வசதி இல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல் பல மாதங்களாகத் தேக்கி வைத்ததும், போதிய தார்ப்பாய்கள் இல்லாததுமே இதற்கு முக்கிய காரணம் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கஷ்டப்பட்டு விளைவித்த நெல், மழையில் நனைந்து வீணானதால், அவற்றின் தரம் குறைந்து விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல் மூட்டைகளை முறையாக மூடாமலும், உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமலும் அலட்சியம் காட்டுவதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒருசில இடங்களை த.வெ.க. அமைச்சர்கள் இருவர் சென்று பார்வையிட்டதாக செய்திகள் வந்துள்ளன. அமைச்சர்கள் பார்வையிடுவதால் மட்டுமே விவசாயிகளின் குறைகள் தீர்ந்துவிடாது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளைப் பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை இந்த அரசாவது மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களிலும் குடோன்கள் அமைக்க உடனடி நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.

குடோன்கள் கட்டி முடிக்கப்படும் வரை, போதுமான அளவு தார்ப்பாய்களை கொள்முதல் செய்து நெல் மூட்டைகளை மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். அரசின் நிதி நிலையைக் காரணம் காட்டி குடோன்கள் அமைக்கும் பணியை தள்ளிப்போடக்கூடாது என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.