சென்னை,
தமிழகத்தின் புகழ்பெற்ற பண் இசை மற்றும் திருமுறை அறிஞரான ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதனுக்கு, கலைத்துறைக்கான நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த விருதை பெற்றார்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் கூறியதாவது:-
திருச்சிற்றம்பலம். நம்முடைய இந்தியப் பெருநாட்டில் தமிழகத்திற்கு என்று ஒரு தனிச் சிறப்புண்டு. அது இந்த உலகறிந்த உண்மையாகும். காரணம், திரும்பிய பக்கமெல்லாம் ஆலயங்கள்; அங்கே அருளாளர்களின் தோற்றங்களும் நிறைந்துள்ளன. திருஞானசம்பந்தர் முதற்கொண்டு சைவம், வைணவம் போன்ற மதங்களை வளர்த்து, பெரும் சிறப்புடையதாக விளங்குவது நம்முடைய தமிழகமாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார். நம்முடைய தமிழகத்தில் எண்ணற்ற அருளாளர்கள் தோன்றி சிறந்து விளங்கியுள்ளனர். சமய குரவர்கள், சந்தான குரவர்கள் போன்ற அருளாளர்களும், சித்தர்களும், முனிவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து ஆன்மீகத்தை வளர்த்தனர். மிக அற்புதமான தெய்வீக பாடல்கள் தமிழகத்தில் மட்டும்தான் உண்டு.
நம்முடைய இந்து மதத்தின் சிறப்பாக விளங்கும் பன்னிரெண்டு திருமுறைகள், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றின் வரலாறுகள் எல்லாம் தமிழகம் அறிந்த ஒன்றாகும். தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனுடைய காலத்திலிருந்து, இந்த திருமுறைகளை வெளிக்கொண்டு வந்த பெருமை அவருக்கே உரியது. இதனை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல கல்வெட்டுகளின் வாயிலாக நாம் பார்த்து அறிந்து இருக்கிறோம்.
இன்றைய காலகட்டத்திலே ஊதிய உயர்வு இருந்தாலும், பழங்காலத்திலே கடுமையான சூழ்நிலைகளிலும் இந்த திருமடங்களிலும் ஆலயங்களிலும் தேவாரம், திருமுறைகளை வளர்த்த பெருமை ஓதுவா மூர்த்திகளுக்கே உண்டு. அன்று முதல் இன்று வரை அவர்கள் இதனை போற்றி காப்பாற்றி வருகின்றார்கள்.
இன்றைய நிலையில் மத்திய அரசு இந்த பத்ம விருதினை வழங்கி என்னை கௌரவித்துள்ளது. இந்த தருணத்தில் எங்களுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய அரசுக்கும், இதனை செயல்படுத்துகின்ற அமைப்புகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.