சென்னை,
பத்மஸ்ரீ விருதுபெற்ற டாக்டர் ஆர்.ஸ்ரீதருக்கு பாராட்டு விழாவும், அவர் இணைந்து எழுதியுள்ள "Innovations in Indian Public Service Broadcasting" என்ற நூல் வெளியீட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு ஆர்.ஸ்ரீதரை கவுரவிக்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) சார்பில், பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் மூத்த அதிகாரி டாக்டர் ஆர்.ஸ்ரீதருக்கு பாராட்டு விழாவும், அவர் இணைந்து எழுதியுள்ள "Innovations in Indian Public Service Broadcasting" என்ற நூல் வெளியீட்டு விழாவும் இன்று (18.06.2026 வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு, சென்னை அகில இந்திய வானொலியின் Drama-1 அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரைப் பாராட்டி கவுரவிப்பதுடன், "Innovations in Indian Public Service Broadcasting" நூலை வெளியிட்டு, தொடக்க உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு, ஆகாஷ்வாணி தலைமை இயக்குநர் ராஜீவ் குமார் ஜெயின் தலைமை வகிக்கிறார். சென்னை அகில இந்திய வானொலி அலுவலகத் தலைவர் மற்றும் துணை தலைமை இயக்குநர் (பொறியியல்) ராமபத்ரம் வெங்கடேஷ் வரவேற்புரையாற்றுகிறார்.
மேலும், டிஜிட்டல் மீடியா ஆலோசகர் சுபோ செங்குப்தா, இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் (IIMC) முன்னாள் தலைமை இயக்குநர் பேராசிரியர் கே.ஜி. சுரேஷ், மூத்த ஊடகவியலாளர் ஏ. சந்திரசேகரன் ஆகியோர் இணையவழி சிறப்புரையாற்றுகின்றனர். நூலாசிரியர்களில் ஒருவரான டாக்டர் என். சுந்தரம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
வெளியிடப்படும் நூலின் முதல் பிரதியை, மீடியா கம்யூனிகேஷன் பவுண்டேஷன், புதுடெல்லி அமைப்பின் ஆஷிஷ் திவாரி பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியின் நிறைவாக, சென்னை ஆகாஷ்வாணி நிகழ்ச்சித் துறைத் தலைவர் ஆர். சுதர்சன் நன்றியுரையாற்றுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.