கார்த்திக் 
தமிழக செய்திகள்

மூதாட்டி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த பெயிண்டர் கைது

ஜன்னல் அருகே மொபைல் போன் நீட்டப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து சத்தமாக கூச்சலிட்டார்.

சென்னை,

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீட்டின் குளியலறையில் மூதாட்டி ஒருவர் குளிப்பதை தனது மொபைல் போன் மூலம் ரகசியமாக படம் பிடித்த பெயிண்டர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கூச்சலிட்ட மூதாட்டி – சிக்கிய பெயிண்டர்

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 40) என்பவர், குளியலறையின் ஜன்னல் வழியாக தனது மொபைல் போனைப் பயன்படுத்தி மூதாட்டியை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஜன்னல் அருகே மொபைல் போன் நீட்டப்பட்டிருப்பதை தற்செயலாக கவனித்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து சத்தமாக கூச்சலிட்டார்.

தர்ம அடி கொடுத்து ஒப்படைத்த பொதுமக்கள்

மூதாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர், அங்கிருந்து தப்பியோட முயன்ற கார்த்திக்கை துரத்திப் பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக் மது போதையில் இருந்ததும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில், திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரது மொபைல் போனைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூதாட்டி குளிப்பதை வீடியோ எடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT