பாஸ்கர் 
தமிழக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்டு பெயிண்டர் கொலை; நெல்லையில் பதற்றம்; அதிரடி படையினர் குவிப்பு

படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் தலையை அறுத்து, அவரது வீட்டின் முன்பே வீசி சென்றனர் அந்த மர்ம நபர்கள்.

திருநெல்வேலி,

நெல்லை உடையார்பெட்டி அருகே உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில், வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர், பாஸ்கரை வழிமறித்து திடீரென தாக்கியுள்ளனர்.

படுகொலை

கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் பாஸ்கரின் தலையை துண்டாக வெட்டி எடுத்தனர். அதோடு நிறுத்தாமல், படுகொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் தலையை அறுத்து, அவரது வீட்டின் முன்பே வீசி சென்றனர் அந்த மர்ம நபர்கள்.

கொலையாளிகள் சரண்

ஆற்றங்கரைக்கு சென்றவர்கள் பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தச்சநல்லூர் போலீசார் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே, கொலையை அரங்கேற்றிய அந்த இரு நபர்களும் நேராக காவல் நிலையம் சென்று போலீசாரிடம் சரணடைந்தனர்.

முன்விரோதமே காரணம்?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாஸ்கருக்கும் சரணடைந்த நபர்களுக்கும் இடையே இருந்த முந்தைய பகை மற்றும் முன்விரோதம் காரணமாகவே இந்த கொடூரக்கொலை அரங்கேறியுள்ளதா, அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி படையினர் குவிப்பு

இந்த நிலையில், பாஸ்கரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதி முழுவதிலும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதன் காரணமாக, பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.