திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த 57 வயது நபர் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.இவரது மனைவியின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் இறந்ததால், ஆதரவின்றி தவித்த அந்த பெண் தனது 13 வயது இரட்டையர் பெண் குழந்தைகளுடன் அக்காள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அந்த பெயிண்டர் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து பெயிண்டரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், அனைத்து சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இரட்டை சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அவர்களின் பெரியப்பாவான பெயிண்டருக்கு 39 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.