தமிழக செய்திகள்

அம்ரித் பாரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பழனி ரெயில் நிலையம் விரைவில் திறப்பு

தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

பழனி,

பழனி ரெயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் திறப்பு விழா காண்கிறது.

அம்ரித் பாரத் திட்ட பணிகள்

பழனி ரெயில்நிலையத்தை 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் புதுப்பித்து நவீனப்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் ரெயில்நிலைய நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறைகள், வாகன நிறுத்தம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நகரும் படிக்கட்டு, உணவக வசதி, ரெயில்கள் குறித்த அறிவிப்பு பலகை, நவீன மயமாக்கப்பட்ட வளாகம், கழிப்பறைகள், நுழைவு வாயில் என சுமார் ரூ.20 கோடியில் கட்டுமான பணிகள் நடந்தன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றன.

எனினும் திட்ட பணிகளை பொறியாளர் குழு, அதிகாரிகள் குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே புதுப்பிக்கப்பட்ட ரெயில்நிலைய பணிகள் ஏறக்குறைய முடிவடைந்ததால் எப்போது திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்நிலையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா சிறப்பு வசதிகளுடன் கூடிய ரெயிலில் நேற்று இரவு பழனி வந்தார்.

கோட்ட மேலாளர் ஆய்வு

பின்னர் பழனி ரெயில் நிலையத்தில் நிறைவு பெற்ற 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக நடை மேடைகள், ரெயில்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட பூங்கா, நுழைவு வாயில், கழிப்பிட கட்டிடம் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முடியும் தருவாயில் உள்ள பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொறியாளர்கள் குழுவினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வு குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, மதுரை கோட்டத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பழனி உள்பட சில ரெயில்நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு பணிகள் முழுமை பெற்றதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வு குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு தெரியப்படுத்தி திறப்பு விழாவுக்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.