பழனி,
பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் பதிவுத்துறை பெண் ஊழியர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பழனி கோவில் அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த ஜூலை 6-ந்தேதி தனி நபர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், உடுமலை அருகே பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி, வக்கீல் அன்வர்தீன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் ஆகிய 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் வக்கீல் அன்வர்தீன் கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி உடல்நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் சிறையில் உள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாசை கடந்த மாதம் 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதோடு, அவரது வீட்டில் இருந்த 2 கணினிகள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த நில மோசடி தொடர்பாக ஏற்கனவே பழனி மாவட்ட பதிவாளராக இருந்த சசிகலா, உதவி சார்பதிவாளர் பாலசந்தர், இளநிலை உதவியாளர் சிவசங்கரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் பத்திரம் தயாரிப்புக்கு உதவிய பத்திர எழுத்தரும், வக்கீலுமான சிவக்குமார் (வயது 45) தலைமறைவாக இருந்தார். அவரது குடும்பத்தினர் செல்போனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே வக்கீல் சிவக்குமார் ஒட்டன்சத்திரம் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை வீட்டில் வைத்து கைது செய்தனர். இதேபோல் பத்திரப்பதிவுக்கு உதவிய இளநிலை உதவியாளர் சிவசங்கரியை (36), பழனி குபேரபட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் 2 பேரையும் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 2 பேரையும் வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர். இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.