சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில், பழனியில் மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.