தமிழக செய்திகள்

பாலாறு-பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறப்பு

பழனி அருகே பாலசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது.

பழனி,

பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக் காக தாடாக்குளம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பாலாறு-பொருந்தலாறு அணை

பழனி அருகே பாலசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. மாவட்டத்திலேயே மிகப்பெரிய அணையான இதற்கு கொடைக்கானல். பள்ளங்கி, பூம்பாறை உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஓடைகள் வழியாக தண்ணீர் வரத்தாகிறது. கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அதன்படி 65 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 50.43 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இதற்கிடையே அணையின் முதல் போக பாசனத்துக்காக தாடாக்குளம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தர விட்டது. அதன்படி நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல் போக பாசனம்

முன்னதாக அணை பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். த.வெ.க. மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜன், செயற்குழு உறுப்பினர் பாலன் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அணை மற்றும் கால்வாய் பகுதியில் பூக்களை தூவி தண்ணீரை அதிகாரிகள், விவசாயிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக தாடாக்குளம் கால்வாயில் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் பழனி, பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள 844 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் இருந்து திறக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT