கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு... அதிகாரி, வார்டன் மீது கைதிகள் கொலைவெறி தாக்குதல்

படுகாயமடைந்த சிறை அதிகாரி, வார்டன் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை சிறையில் அதிகாரி, வார்டன் மீது கைதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை கைதிகள்

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 24 மணி நேரமும் சிறை காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மந்திரம் மகன் கோட்டை என்ற சுந்தரம், மானூரைச் சேர்ந்த முருகன் மகன் மகேஷ் ஆகியோர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

சாப்பாடு கேட்டு மிரட்டல்

சிறையில் 5-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும் நேற்று மதியம் அதே பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு விசாரணை கைதியிடம், 'உனக்கு தரும் சாப்பாட்டை எங்களுக்கு நீ கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவதாக' மிரட்டி உள்ளனர். இதனால் அச்சம் அடைந்த அந்த விசாரணை கைதி, சிறை வார்டன் மணிகண்டன் (54 வயது) என்பவரிடம் புகார் கொடுத்தார். உடனே மணிகண்டன், கைதிகள் இருவரையும் விசாரணைக்கு அழைத்து இருந்தார். ஆனால் இருவரும் விசாரணைக்கு செல்லவில்லை. எனவே மணிகண்டனே நேரடியாக அவர்களை சந்தித்து விசாரிக்க சென்றார்.

கொலைவெறி தாக்குதல்

அப்போது மணிகண்டனுக்கும், விசாரணை கைதிகள் சுந்தரம், மகேஷ் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மகேஷ், சுந்தரம் இருவரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அங்கு வந்த உதவி சிறை அதிகாரியான காசி பாண்டியன் (53 வயது) என்பவர் மீதும் அவர்கள் இருவரும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் இருவருக்கும் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரும் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் சுந்தரம், மகேஷ் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT