ஈரோடு,
ஈரோடு அருகே சித்தோடு டெக்ஸ்வேலி வணிக வளாகத்தில் பிரம்மாண்ட பனை இயற்கை திருவிழா மற்றும் பனை பொருட்கள் கண்காட்சி கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மிக சிறப்பாக நடைபெற்றது. நமது மாநிலத்தின் பாரம்பரிய மரமான பனை மரத்தின் முக்கியத்துவத்தை இளந்தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த இரண்டு நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பனை பொருட்கள் கண்காட்சியில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மூலம் சுமார் 90-க்கும் மேற்பட்ட பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அரிய வகை இயற்கை உணவுகள் மற்றும் வியப்பூட்டும் கைவினை பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பதநீர், நுங்கு பால், பனை பழ ஐஸ்கிரீம் போன்ற சுவையான மற்றும் சத்துமிக்க பனை உணவுகளை ருசி பார்த்து, ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதுமட்டுமின்றி, பனையோலையால் நுணுக்கமாக செய்யப்பட்ட கூடைகள், தொப்பிகள், விசிறிகள், வீட்டு உபயோக அலங்கார பொருட்கள் மற்றும் குழந்தைகளை கவரும் பனையோலை விளையாட்டு பொருட்களும் கண்காட்சியை அலங்கரித்தன.
இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், பசுமை தாயகம் தலைவருமான சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"நமது பாரம்பரியமிக்க பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு அரிய நன்மைகளை தரக்கூடியவை. கருப்பட்டியும் வெல்லமும் ஒரு தாயை போல நமக்கு ஊட்டமளிக்கின்றன. ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பனை மரம் என்றால் வெறும் நுங்கு தரும் மரம் என்று மட்டுமே தெரிகிறது. இத்தகைய சிறப்பான மரங்களின் பெருமைகளையும் பயன்களையும் நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவர் பி.சி.துரைசாமி, இணை நிறுவனர் டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.