சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்க்காக தயாரான பாமணி அரசு இல்லத்தில் விஜய் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். இனி அதிகாரிகளுடன் இங்கு தான் ஆலோசனை நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய், அலுவலகப் பணிகளுக்காக தலைமைச்செயலகத்துக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்று வருகிறார். நீலாங்கரை முதல் தலைமைச்செயலகம் இடையிலான சாலைகளில் முதல்-அமைச்சர் விஜயின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும் அவதிக்குள்ளாவதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பசுமை வழிச்சாலையில் பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள பாமணி இல்லத்தை முதல்-அமைச்சர் விஜயின் அலுவல்பூர்வ இல்லமாக மாறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
பல ஆண்டுகளாக அரசு விருந்தினர் இல்லமாக இருந்த பாமணி இல்லத்தை நவீன வசதிகளுடன், அதிந வீன பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய முகாம் அலுவலகமாக மாற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், பாமணி இல்லத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள், அலுவலக அமைப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, முதல்-அமைச்சரின் புதிய அலுவல் பூர்வ இல்லத்துக்கு 'வெற்றி இல்லம்' என்று பெயர் மாற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.