திருப்பூர்,
மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றிய ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலராக ராஜேந்திரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று அவர் மதுபோதையில் அலுவலகத்திற்கு வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி அவரிடம் விளக்கம் கேட்டனர்.
அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் அதிக பணிச்சுமை அளிக்கப்படுவதாகவும், அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் அவர் கண்ணீருடன் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து, பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஆய்வுக்காக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில், ஊராட்சி செயலர் மதுபோதையில் இருந்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலர் ராஜேந்திரனை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.