தமிழக செய்திகள்

பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் இந்நிதியுதவி வழங்கப்படுகிறது.

சென்னை,

பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (09.06.2026) நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தமிழக வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு நிதியுதவியாக ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்

இம்மாதம் நடைபெறவுள்ள பிரெஞ்சு பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டி மற்றும் பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான பயண மற்றும் பயிற்சிச் செலவுகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் (Elite Sportsperson Scheme) கீழ் இந்நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் பாரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர் மனோஜ்குமார் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல ஏதுவாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ.6,27,795/- மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தையும் வழங்கினார்.

ஹாங்காங்கில் மே மாதம் நடைபெற்ற ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (CDS) கீழ் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களான ஜித்தின அர்ஜுனன் (ஆண்கள் நீளம் தாண்டுதல்), சாதனா ரவி (பெண்கள் மும்முறை தாண்டுதல்) மற்றும் ஜி.பாவனா (பெண்கள் 4x100 தொடர் ஓட்டம்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர் அவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், இவர்களுடன் ஆண்கள் 4x400 தொடர் ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ். ரஞ்சித் குமார் ரூ. 2 லட்சமும் உயரிய ஊக்கத் தொகையினையும் அமைச்சர் வழங்கினார்கள்.

காசோலை

சீனாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய கடற்கரை சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்ளும் சைலிங் விளையாட்டு வீரர் சித்தரேஷ் நடேசன் உயர்தர உபகரணங்கள் வாங்குவதற்கு Elite திட்டத்தின் கீழ் ரூ. 4.65 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன், பொது மேலாளர் எல். சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.