சென்னை,
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் நேற்று முன்தினம் அறிவித் தார். தமிழக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். இதற்கிடையே மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான விவாதம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது;
மாற்றுத்தொழில் திட்டங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். விமான நிலையம் வரவில்லையென்றால் தொழிலே பாதிக்கப்படும் என்கிறார்கள். 49 சதவீதம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி, பரந்தூர் விமான நிலையத்தை நம்பிதான் போய்க்கொண்டிருக்கிறதா?. 2-வது விமான நிலையம் வேண்டும். மக்கள் பாதிக்கப்படாமல், விவசாய நிலம் பாதிக்கப்படாமல் அது அமைக்கப்படும். சிப்காட்டுக்கும் மக்கள், விவசாயம் பாதிக்கப்படாத வகையில்தான் இருக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில், அரசின் அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; - பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.