தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த மகளின் காலை பிடித்து கதறி அழுத பெற்றோர் - வைரல் வீடியோ

திவ்யதர்ஷினியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி லாரி செட் பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவரது மனைவி பிரவீனா. இவர்களது மகள் திவ்யதர்ஷினி (வயது 19), கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகரைச் சேர்ந்த ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வரும் திருப்பதி என்பவரது மகன் பெருமாளும் (23) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் திவ்யதர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பொருட்படுத்தாத திவ்யதர்ஷினி கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பெருமாளுடன் சென்று விட்டார். இருவரும் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக இருவ ரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் 10 பேருடன் போலீஸ் நிலையத்துக்கு வந்த திவ்யதர்ஷினியின் பெற்றோரான காளி, பிரவீனா ஆகியோர் தங்களது மகள், காதல் கணவனுடன் இருப்பதை பார்த்ததும் கதறி அழுதனர். 'படிக்க வைத்து ஆளாக்கி அழகுப்பார்த்த எங்களுக்கு இப்படி துரோகம் செய்து விட்டாயே' எனக்கூறி அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

அப்போது அவர்கள் தங்களது மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு திவ்யதர்ஷினி மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரவீனாவும் தந்தை காளியும் மகள் என்றும் பாராமல் திவ்யதர்ஷினியின் காலை பிடித்து 'எங்களுடன் வீட்டுக்கு வந்து விடு' என கெஞ்சியபடி கதறி அழுதனர். அப்போது அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் வெளியேற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை கண் டித்து திவ்யதர்ஷினியின் பெற்றோரும், உறவினர்களும் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் திடீரென உருண்டு புரண்டு கதறி அழுதனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் திவ்யதர்ஷினியை அவரது விருப்பத்தின் பேரில் காதல் கணவன் பெருமாளுடன் இரவு 9.30 மணிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து காளி- பிரவீனா மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து அழுதுக் கொண்டே சென்றனர்.