விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (26 வயது). விவசாய கூலித்தொழிலாளி. இவர், அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயசூர்யா தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயசூர்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஜெயசூர்யா இறந்தார்.
இதுகுறித்து அவருடைய தாயார் கெஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.