கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இரவு வீட்டிற்கு தாமதமாக வந்ததால் கண்டித்த பெற்றோர்: இளம்பெண் எடுத்த வீபரீத முடிவு

சேலத்தில் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த இளம்பெண்ணை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி செல்லக்குட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வித்யா (25 வயது). என்ஜினீயரான இவர், வீட்டில் இருந்து வேலை தேடி வந்தார். நேற்று முன்தினம் மாலை வித்யா தனது தோழிகளுடன் கோவிலுக்கு சென்றார். பின்னர் இரவில் அவர் தாமதமாக வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை கோவிலுக்கு சென்றால், சாமி தரிசனம் செய்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு வர வேண்டியது தானே? என்றும், ஏன் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வருகிறாய்? என்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வித்யா, தூங்க செல்வதாக கூறி வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் வித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வித்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு வீட்டிற்கு தாமதமாக வந்ததை பெற்றோர் கண்டித்ததால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.