திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் பச்சிளம் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த தம்பதியினர் ரஹ்மத்துல்லா - ஹவாமா. இவர்களுக்கு கடந்த 14-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 4-வதாக தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அந்த குழந்தையை விற்க முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.
இந்த தகவலறிந்து பெங்களூருவில் இருந்து செய்யது - சம்ரின் தாஜ் தம்பதியினர் திருப்பத்தூர் வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதன் காரணத்தால் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியரின் குழந்தையை ரூ.1,00,000 கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குழந்தையை விற்ற ரஹ்மத்துல்லா - ஹவாமா மற்றும் வாங்கிய செய்யது - சம்ரின் தாஜ் ஆகிய 4 பேரையும் சட்டவிரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்தனர். மேலும், குழந்தையை சட்டவிரோதமாக விற்றதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.