தமிழக செய்திகள்

கார்த்திகை தீபத்திருநாளில் பர்வதமலை மீது ஏற 1,200 பேருக்கு அனுமதி

காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் பர்வதமலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

கார்த்திகை தீபத்திருநாளில் பர்வதமலை மீது ஏற 1,200 பேர் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்வதமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இணையாக பக்தர்களால் போற்றப்படுவது பர்வதமலை. செங்குத்தான மலையின் உச்சியில் மல்லிகார்ஜூனர் பிரமராம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் செல்வதற்கு கரடுமுரடான பாதைகள், செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாள்களில் இங்கு அதிக அளவிலான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா

அதே போல் கார்த்திகை தீபத் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் வந்தனா கார்க் தலைமை தாங்கி பேசினார்.

4,560 அடி உயரம்

அவர் பேசுகையில், வருகிற 24-ந்தேதி தீபத்திருநாள் அன்று காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 4,560 அடி உயரம் உள்ள பர்வதமலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாச பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயாளிகள், உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மலை ஏற முயற்சிக்க வேண்டாம்.

1,200 பேருக்கு அனுமதி

மலை ஏற 900 வெளி மாநில, வெளியூர் பக்தர்கள், 300 உள்ளூர் பக்தர்கள் என 1,200 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள். வெளியூர் பக்தர் https://parvathamalai.hrce.tn.gov.in/இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT