சென்னை,
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்தில் 231 பயணிகள் பயணித்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த உடன் பயணிகளை இறக்கும் இடத்திற்கு விமானம் மெதுவாக சென்றது. அப்போது திடீரென விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி விமானத்தில் இருந்து கீழே குதித்து ஓடுதளத்தில் ஓடினார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட பாதுகாப்புப்படையினர், ஓடுதளத்தில் ஓடிய அந்த பயணியை விரட்டிப்பிடித்தனர். பின்னர், அவரிடம் பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பயணி புதுக்கோட்டையை சேர்ந்த நிஜாமுதீன் ஷெரீப் (வயது 34) என்பது தெரியவந்துள்ளது. விமானத்தின் அவசர கால கதவை திறந்து கீழே குதித்து ஓடியதற்கான காரணம் குறித்து நிஜாமுதீன் ஷெரீப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.