தமிழக செய்திகள்

நெல்லை - மேட்டுப்பாளையம் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க வருடாந்திர ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

நெல்லை,

நெல்லை -மேட்டுப்பாளையம் ரெயிலை நிரந்தர ரெயிலாக மாற்றி, தினமும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க வருடாந்திர ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் பாண்டியராஜா தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார். நிர்வாகி சேத்ரராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் செங்கோட்டை -தாம்பரம் ரெயிலை தினசரி இயக்க ரெயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயங்கிய நெல்லை கொல்லம் பகல் நேர பாசஞ்சர் ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருவுக்கு தினசரி ரெயில் சேவையை தொடங்க வேண்டும். தென்காசி வழியாக செல்லும் நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயிலாக மாற்றி, தினமும் இயக்க வேண்டும்.

சாளுக்யா எக்ஸ்பிரஸ்

மும்பை - நெல்லை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 11011 / 11012) ரெயிலை சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். செங்கோட்டை - ராமேஸ்வரம் இடையே புதிய ரெயில் அறிமுகப்படுத்த வேண்டும்.

செங்கோட்டையில் இருந்து தென்காசி, நெல்லை வழியாக திருப்பதிக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16235) காலை 7 மணிக்குள் மதுரைக்கு வரும் வகை செங்கோட்டை பாசஞ்சர்யில் நேரம் மாற்றம் செய்து, காலையில் புறப்படும் மதுரை ரெயிலுக்கு (காலை 7.25 மணி) இணைப்பாக மாற்ற வேண்டும்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

செங்கோட்டை நெல்லை பாசஞ்சர் ரெயிலை காலை 8.45 மணிக்குள் நெல்லை சந்திப்புக்கு சென்றடையும் வகையிலும், மாலை நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை செங்கோட்டை பயணிகள் ரெயில் மாலை 6.30 மணிக்கு புறப்படும் வகையிலும் நேரம் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் செபாஸ்டின், சுப்புராஜ், செல்வா, சங்கர், சந்துரு, ராஜசேகர், ராம் குமார், தீபக், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT