தமிழக செய்திகள்

சென்னை திரும்பும் பயணிகள்.. இன்றும் நாளையும் 11,197 அரசு பஸ்கள் இயக்கப்படும்- தமிழக அரசு

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும், நாளையும் 11,197 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தலைநகர் சென்னையில் வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் மற்றும் வணிகம் காரணமாக வந்து குடியேறி வசித்து வருபவர்கள், விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொணடாடப்பட்டது. இதற்காக, சென்னைவாழ் மக்கள் அதிகளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

அலைமோதிய பயணிகள்

இதனால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், ஆம்னி பஸ்கள் புறப்படும் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும், தனியாக தங்கி வேலைபார்க்கும் இளைஞர்கள் தனித்தனியாகவும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்துடன் சென்றதை பார்க்க முடிந்தது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடி முடித்த மக்கள் இன்று சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால், பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

இந்நிலையில், அவர்கள் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக இன்றும், நாளையும் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4,382 பஸ்களுடன், கூடுதலாக 6,815 சிறப்பு பஸ்கள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11,197 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

ரயில்

இதனிடையே, திருச்சியில் இருந்து இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படும் எனவும், மானாமதுரையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு தாம்பரம் வரை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT