தமிழக செய்திகள்

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள்; ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங் கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் குழந்தைகளுக்கு சீருடை தைப்பது, பள்ளி பைகள், நோட்டுப் புத்தகங்கள் வாங்குவது உள்ளிட்ட பணி களில் பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கோடை விடுமுறையை சொந்த ஊர்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் மகிழ்ச்சியாக கழிப்பதற்காக வெளியூர் சென்றிருந்த சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.

அலைமோதும் பயணிகள் கூட்டம்

இதனால், கடந்த இரு தினங்களாக பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை, மதுரை, திருச்சி பேருந்து நிலையங்களில் சென்னை நோக்கி வந்த பஸ்கள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆக வந்தன. டிக்கெட் புக் செய்யாமல் வந்த பயணிகள் பஸ்களில் இடம் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் நிற்க கூட இடமில்லாத அளவிற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

சுங்கச்சாவடிகளில் நெரிசல்

அதேபோல, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இன்றும் கூட சென்னைக்கு வருவதற்கான பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் இல்லை. அதேபோல் தனியார் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், அவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.