சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் மண்ணின் மண்வாசனையையும், கிராமிய வாழ்க்கையின் உணர்வுகளையும், தமிழர் பண்பாடு, மரபு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை திரைப்பட மொழியின் மூலம் உலக அரங்கில் உயர்த்தி காட்டிய தலைசிறந்த திரைப்பட இயக்குநர் சிகரம் பாரதிராஜா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.
தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கிய பாரதிராஜா, வெறும் திரைப்பட இயக்குநராக மட்டும் அல்லாமல், தமிழ் மண்ணின் பெருமையையும் தமிழர் அடையாளத்தையும் கலை வடிவில் பதிவு செய்த பண்பாட்டு தூதுவராக திகழ்ந்தார். நகரங்களை மையப்படுத்திய திரைப்பட உலகை கிராமங்களின் நிஜ வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்று, உழைக்கும் மக்களின் உணர்வுகள், அவர்களின் போராட்டங்கள், உறவுகள் மற்றும் சமூக உண்மைகளை திரையில் உயிர்ப்பித்தவர்.
அவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படைப்புகளாக இல்லாமல், சமூக அக்கறை, மனிதநேயம், சமத்துவ சிந்தனை மற்றும் உரிமைக் குரலை மக்களிடம் கொண்டு சென்ற விழிப்புணர்வு ஆவணங்களாகவும் அமைந்தன. தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழர் வாழ்வின் நுணுக்கங்களையும் உலக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்கு தனித்துவமான இடம் உண்டு.
என் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்டவராக இருந்த பாரதிராஜா, சமூக பிரச்சினைகள் குறித்தும், தமிழ் இனத்தின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார். கலைஞராக மட்டுமின்றி சமூக சிந்தனையாளராகவும், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பொது அறிவாளராகவும் அவர் விளங்கினார்.
பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட துறைக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது படைப்புகளும், சிந்தனைகளும், தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகளும் என்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைப்பட துறையினர் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.