தமிழக செய்திகள்

மாபெரும் திரைக்கலைஞன் பாரதிராஜா மறைவு- அன்புமணி ராமதாஸ் இரங்கல்

தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-.

இயக்குனர் இமயம் என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார். நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வெற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார்; நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்ட பெரும்பன்மையான விருதுகளை வாங்கிக் குவித்தவர் அவர். அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். கடந்த 28ஆம் தேதி மாலை பாரதிராஜா அவர்களை, இயக்குனர் தங்கர் பச்சானுடன் சென்று அவரது நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். எனது நலம் விசாரித்த அவர், பொதுவான விஷயங்கள் குறித்து என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தென்பட்ட தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவற்றைப் பார்த்த நான் விரைவில் அவர் முழுமையாக நலம் பெறுவார்; இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இன்று காலை கிடைத்த அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார்.

இயக்குனர் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.