தமிழக செய்திகள்

பட்டா மனுக்களை 5 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தல்

பட்டாக்கள் வழங்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை,

சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூட்ட அரங்கில் இன்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் இணைய வழி பட்டா மாறுதல் - உட்பிரிவு அற்ற இனங்கள் தானியங்கி பட்டா மாறுதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பட்டாக்கள் வழங்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் பட்டா கோரி மனு அளித்தால், அந்த மனுக்களை 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நில உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்க்க அரசு முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.