தமிழக செய்திகள்

பீளமேடு: உடலை கட்டுக்கோப்பாக வைக்க அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் மாஸ்டர் பலி

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவர் கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் உடற்பயிற்சி கூடத்தின் அருகே ஒரு அறையில் தங்கி இருந்தார். அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகளவில் உடற்பயிற்சி செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் மாத்திரை மற்றும் ஊசியையும் அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு உடற்பயிற்சி கூடத்துக்கு வருவதாக தனது நண்பர்களிடம் சொல்லி இருந்தார். இதனால் அங்கு பயிற்சி பெற்று வருபவர்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் மாலை 4.15 மணி ஆகியும் வினோத்குமார் அந்த உடற்பயிற்சி கூடத்துக்கு வரவில்லை.

இதனால் அவர்கள் வினோத்குமாரின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அத்துடன் அங்கு அவர் சாப்பிட முட்டைகளையும் தயாராக வைத்து இருந்தது தெரியவந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வினோத்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வினோத்குமாரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது, ஜிம் மாஸ்டரான வினோத்குமார் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க அதிகளவில் உடற்பயிற்சி செய்துள்ளார். அப்படி செய்யும்போதுதான் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்து இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.