சென்னை,
பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்காக சிறப்புத் திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நா. ஆனந்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து பேசிய அவர், இது தொடர்பாக அளித்த மனுவின் விவரம்:
வணக்கம்!
தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமாக திகழ்வது வேளாண்மை தான். அந்த வேளாண் தொழிலுக்கு மிக முக்கிய ஆதாரமாக திகழ்வது பாசன நீர் தான். ஆனால், தமிழ்நாட்டில் பாசன ஆதாரங்கள் வேகமாக குறைந்து வருவதன் காரணமாக சாகுபடி பரப்பும் வேகமாக குறைந்து வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு, கடந்த 45 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 லட்சம் ஏக்கர் குறைந்து விட்டது. தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் நிதியுதவியுடன் மாநில நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம் நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு கடந்த 45 ஆண்டுகளில் 16 லட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேர், அதாவது 40 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சாகுபடி பரப்பின் விகிதம் 48 விழுக்காட்டிலிருந்து 36%ஆக குறைந்துள்ளது.
புதிய பாசனத் திட்டங்கள்
1970-71 காலத்தில் தமிழ்நாட்டில் சாகுபடி நடைபெறும் நிலப்பரப்பு 61.69 லட்சம் ஹெக்டேராக இருந்தது. ஆனால், 2018-19 ஆம் ஆண்டில் இது 45.82 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 48 ஆண்டுகளில் சாகுபடி பரப்பளவு 15.87 லட்சம் ஹெக்டேர், அதாவது சுமார் 40 லட்சம் ஏக்கர் குறைந்து விட்டது. பாசன ஆதாரங்கள் சீரழிக்கப்பட்டதும், புதிய பாசன ஆதாரங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்றி, வேளாண் தொழிலுக்கு புத்துயிரூட்டுவதற்காகத் தான் தமிழ்நாட்டில் புதிய பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள கீழ்க்கண்ட நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
1. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்
வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வது தான் காவிரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு - வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை கடந்த 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2008-09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக காவிரியாற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் ரூபாய் 165 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்நதிகளை இணைப்பதற்கான 262 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் அமைப்பது குறித்து தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், அதன் பின் 13 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்பு பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்கு ரூ.6941 கோடியும், மொத்தப் பணிகளுக்கு ரூ.14,400 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் இந்தத் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாகவே ரூ.364 கோடி தான் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியும் முழுமையாக செலவிடப்படவில்லை. மொத்தம் 262 கி.மீ தொலைவுக்கு கால்வாய் வெட்ட வேண்டிய நிலையில், இதுவரை கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே துண்டு துண்டாக 8 கி.மீ தொலைவுக்கு மட்டும் தான் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் போதாது. கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும்.
2. தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியைப் போக்கி வளத்தை உருவாக்கும் முயற்சி தான் தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம் ஆகும். காவிரி ஆற்றில் ஓகனேக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட 1230 நீர்நிலைகளில் நிரப்புவதன் மூலம் தருமபுரி & காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு 3 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் தேவைப்படும். மழைக்காலங்களில் கிடைக்கும் உபரிநீரை கொண்டுதான் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதால், காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால், ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 15 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2018-ஆம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு நடைபயணம், முழு அடைப்பு போராட்டம், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுக்கள் என பல வழிகளில் அரசுக்கு பா.ம.க. கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால், எந்த பயனுமில்லை.
3. அரியலூர்: சோழர் பாசனத் திட்டம்
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்படாமல், செயலிழந்து கிடக்கும் பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி, செம்பியன்மாதேவி என்று அழைக்கப்படும் கண்டராதித்தம் ஏரி, வேட்டக்குடி பண்மாகேஸ்வரி ஏரி, காமரசவள்ளி ஏரி உள்ளிட்ட 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அமைந்துள்ள ஏரிகளை அவற்றின் முழுமையான கொள்ளளவை எட்டும் அளவுக்கு தூர்வாரி மேம்படுத்துதல், அனைத்து ஏரிகளுக்கும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான வரத்துக் கால்வாய்களை ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தான் ‘அரியலூர்: சோழர் பாசனத்திட்டம்’ ஆகும்.
அரியலூர்: சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்த நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் தலைமையிலான வல்லுநர் குழு இத்திட்டம் சாத்தியமானது என அறிக்கை அளித்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 90 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் நிலத்தடி நீர் மேம்படும்.
4. காவிரி - சரபங்கா - திருமணி முத்தாறு கால்வாய் இணைப்புத் திட்டம்
மேட்டூர் அணையின் உபரிநீரை கால்வாய்கள் மூலம் கொண்டு சென்று, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 100 பாசன ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி செலவில் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் பாசனத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் போதிய அளவில் நிறைவு செய்யாது என்பதால், இத்திட்டத்தை விரிவுபடுத்தி காவிரி - சரபங்கா - திருமணி முத்தாறு - வசிஷ்ட நதி இணைப்புத் திட்டமாக முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஆகும். காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது மேட்டூர் அணை நிரம்பி, 16 கண் மதகின் மூலமாக வெளியேற்றப்பட்டு, வீணாகும் தண்ணீரை காவிரி, -சரபங்கா நதி, -திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி இணைப்புக் கால்வாய் மூலம் ஏரி, குளம், குட்டை, நதிகளில் நீரைத் தேக்கி வைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தால் சேலம் மாவட்டம் முதல் 30,154 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். மேலும். நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பாடு அடைவதன் மூலம் 18,228 ஏக்கர் பாசன வசதிபெறும்.
5. நந்தன் கால்வாய் திட்டம் மற்றும் தென்பெண்ணை - துரிஞ்சலாறு இணைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கவுத்தி மலையில் உருவாகும் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அணை கட்டப்பட்டு இருந்தது. அதில் இருந்து நந்தன் கால்வாய் மூலம் 37 கி.மீ. தூரம் நீர் கொண்டுசெல்லப்பட்டு, திருவண்ணாமலையில் 14 ஏரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும் நிரம்பின. அந்த அணை, சுமார் 200 வருடங்களுக்கு முன்பே உடைந்து விட்டது. நந்தன் கால்வாயை சீரமைத்து கீரனூர் அணையிலிருந்து விக்கிரவாண்டி அருகிலுள்ள பனைமலை ஏரி வரை அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் முழுமையான தீர்வு அல்ல.
நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். தென்பெண்ணையாற்றையும், செய்யாற்றையும் இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தென் பெண்ணையாறு - துரிஞ்சலாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென்பெண்ணை ஆற்று நீர் நந்தன் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 36 ஏரிகளுக்கும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதன் மூலம் 6597 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
6. தென்பெண்ணை - செய்யாறு - பாலாறு இணைப்புத் திட்டம்
தென்பெண்ணை ஆற்றையும், பாலாற்றையும் இணைக்கும் திட்டம் 14 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரிக்கு கீழ் தென்பெண்ணை ஆற்றில் உள்ள நெடுங்கல் அணையிலிருந்து 54.15 கி.மீ தொலைவுக்கு கால்வாய் வெட்டி திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகில் உள்ள கோட்டாறு வழியாக தென்பெண்ணை நீரை பாலாற்றுக்கு கொண்டு செல்ல ரூ.648 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அதேபோல், தென்பெண்ணை - செய்யாறு - பாலாறு இணைப்புத் திட்டம் ஒன்றும் முன்வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் செய்யாறையும், சாத்தனூர் அணைக்கு கீழே ஓடும் தென்பெண்ணையாற்றையும் 22 கி.மீ நீளத்திற்கு கால்வாய் வெட்டுவதன் மூலம் இணைப்படும். இதன் மூலம் தென்பெண்ணையாற்றின் உபரி நீரை செய்யாற்றுக்கு திருப்பி திருமுக்கூடல் பகுதியில் பாலாற்றில் இணைக்க முடியும். இதற்காக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
7. பாலாற்றில் தடுப்பணைகள் - பாசனத் திட்டம்
கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு அம்மாநிலத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திரத்தில் 33 கி.மீ. அளவும் மட்டுமே பாலாறு ஓடுகிறது. ஆனால் தமிழகத்தில் 222 கி.மீ. தொலைவு ஓடுகிறது. கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் சுமார் 40 தடுப்பணைகள் கட்டப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஒரே ஒரு தடுப்பணை மட்டும் தான் இருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக வாயலூர், பாலூர், வல்லிபுரம் ஆகிய இடங்களில் 3 தடுப்பணைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. இதனால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது.
பாலாற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில், நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். மேலும், காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டப்பட்டால், மழை மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் தண்ணீரை சேமித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்.
8. மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரும் வகையில் மேட்டூர் அணை வலதுகரைக் கால்வாய்த் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து வலதுகரை கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் உபரி நீர், யாருக்கும் பயன் தராமல் வீணாகச் செல்கிறது.
இந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் வகையில் வலதுகரை கால்வாயிலிருந்து இணைப்புக் கால்வாய் அமைத்து, அதன் மூலம் வரும் காவிரி நீரை, ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெட்டிசமுத்திரம் ஏரி, ராசான்குளம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியப்பாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளில் நிரப்பலாம். இதன் மூலம், அந்தியூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், குடிநீர்ப் பிரச்சினையும் தீரும்.
9. தோனி மடுவு பாசனத் திட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப் பகுதியில் தேவர்மலை, கடை ஈரட்டி, ஈரட்டி, சோளகனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மழைகாலத்தில் வரும் தண்ணீர் சேலம் மாவட்டம், பெரியதாண்டா வழியாக மேட்டூர் அணையில் கலக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை - பர்கூர் மலையில் உள்ள தோனி மடுவு என்ற இடத்தில் நீரைத்தேக்கி அந்தியூர், பவானி, மேட்டூர் பகுதிகளிலுள்ள குளம், குட்டைகளை நிரப்புவது தான் தோனி மடுவு திட்டம். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் பெரியதண்டாவில் தடுப்பணை அமைத்து, வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியேறாமல் இருக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அகழி வழியாக, சுமார் 46 கி.மீ தொலைவில் தண்ணீரை கொண்டு வரலாம். இதற்கு, வனத்துறை அகழிகளையும், ஏற்கனவே உள்ள கால்வாய்களையும், அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, சீர்படுத்தினால் போதும். வேறு புதிகாக கால்வாய்கள் எதுவும் வெட்ட தேவையில்லை.
இந்த திட்டம் செயல்படுத்தபடுத்தப்பட்டால் கொளத்தூர், பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள, 69 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகள், 39 பஞ்சாயத்துகளில் உள்ள 352 ஊர்கள், 12 ஆயிரம் போர்வெல், 5781 கிணறுகள், 69, 978 ஹெக்டேர், அதாவது 1.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வறட்டுப்பள்ளம் அணைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்கும்.
10. படேதலாவ் ஏரிக் கால்வாய்த் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாசன ஆதாரங்களில் ஒன்று படேதலாவ் ஏரி ஆகும். மார்கண்டேயன் நதியில் மாரசந்திரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து படேதலாவ் ஏரிக்கு வேப்பனப்பள்ளி வழியாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் விவசாயம் நடந்து வந்தது. இந்த ஏரியில் இருந்து காட்டிநாயனப்பள்ளி, கம்மம்பள்ளி, கல்லுகுறிக்கி, ஐகுந்தம்கொத்தப்பள்ளி, காட்டாகரம் ஆகிய ஊராட்சிகளில் 95 ஏரிகள் மற்றும் மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்களில் உள்ள ஏரிகளை தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டது. ஆனால் மார்கண்டேன் நதியே வறண்டு போனதால் படேதலாவ் ஏரிக்கு வரும் தண்ணீரும் இல்லாமல் போய்விட்டது.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள எண்ணேக்கோல் அணைக்கட்டில் ஏற்கனவே இடதுபுறத்தில் 2 கி.மீ தூரத்திற்கும், வலது புறத்தில் 1.78 கி.மீ தூரத்திற்கும் கால்வாய்கள் உள்ளது. இவற்றில் இடதுபுறக்கால்வாய் வழியாக புதிய கால்வாய் வெட்டி குருபரப்பள்ளி, ராகிமானப்பள்ளி, போலுப்பள்ளி, கள்ளுக்குறுக்கி வழியாக படேதலாவ் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவது தான் படேதலாவ் ஏரிக்கால்வாய் திட்டம் ஆகும்.
11. பாளேகுளி ஏரி கால்வாய்
பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் நோக்குடன் பாளேகுளி ஏரி கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கே.ஆர்.பி. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பாளேகுளி ஏரியில் சேமிக்கப்படும். அந்த நீரை கால்வாய்கள் மூலம் 28 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம்தான் பாளேகுளி ஏரி கால்வாய் திட்டமாகும். இந்தத் திட்டம் ரூ.6.5 கோடியில் செயல்படுத்தப்பட்டது. இதில் நடந்த ஊழல் காரணமாக கால்வாய்கள் சரியாக அமைக்கப்படவில்லை. கால்வாயைச் சீரமைத்து கடைசி ஏரி வரை தண்ணீரைக் கொண்டு சென்றால் 28 ஏரிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும்.
12. பாண்டியாறு - புன்னம்புழா திட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு பெரிய ஓடைகள் ஒன்று சேர்ந்து 'புன்னம்புழா’ என்ற காட்டாறாக உருவெடுக்கின்றன. அதேபோல், ஓவேலி பேரூராட்சிப் பகுதியில் 'பாண்டியாறு’ உற்பத்தியாகிறது. ஆராட்டுப்பாறை என்ற இடத்தில், பாண்டியாறு, புன்னம்பழா ஆகியவை ஒன்று சேர்ந்து காட்டாறாக பெருக்கெடுத்து ஓடி கேரளா பகுதிக்குள் நுழைந்து 'சாலியாறு’ என்ற பெயரில், எந்தப் பாசனத்திட்டமும் இல்லாமல் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்த வகையில், 14 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.ஆனால், இந்த தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி, அணை கட்டியோ, மோட்டார் மூலம் பம்ப் செய்தோ, மலைகளைக் குடைந்து சுரங்கம் வெட்டியோ, ராட்சச கான்கிரீட் பைப்புகள் மூலமாகவோ பவானியாற்றின் கிளை ஆறான மோயாற்றில் சேர்ப்பதன் மூலம் பவானியாற்றின் நீர்வரத்தை அதிகரிக்க முடியும். ஈரோடு மாவட்டத்தின் எதிர்கால தண்ணீர் தேவைகள் அனைத்தையும் தீர்க்க முடியும். மின்சாரத்தையும் தயாரிக்க இயலும். ’கேரளத்துக்கு மின்சாரம், தமிழகத்துக்கு தண்ணீர்’என்ற வகையில் இந்தத் திட்டத்தால் இரு மாநிலங்களும் பயன்பெறமுடியும்.
பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேறினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். கூடுதலாக இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இந்த தண்ணீரைக்கொண்டு எளிதாக அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தையும் செயல்படுத்த முடியும்.
இவை தவிர காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுதல், காவிரி, நொய்யல், தாமிரபரணி, வைகை உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டங்களை செயல்படுத்த உத்தேசமாக ரூ.2 லட்சம் கோடி வரை செலவாகலாம். இதற்கான நீர்ப்பாசனப் பெருந்திட்டம் ஒன்றை உருவாக்கி, ஆண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்வதன் மூலம் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் அனைத்துத் திட்டங்களையும் செயல்பர்டுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.