தமிழக செய்திகள்

பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு ஆண்மை கிடையாது; அன்புமணி ராமதாஸ் காட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை,

காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க தவெக அரசு தவறியதாகவும் கூறி தஞ்சையில் கடந்த 2ம் தேதி தஞ்சையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.

முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர்.

அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார்.

இந்த பேச்சு இரட்டை அர்த்தம் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் இருப்பதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு ஆண்மை கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் காட்டம்

சென்னை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு குறித்து அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,

பெண்களை பற்றி இழிவாக பேசும் ஆண்களுக்கு ஆண்மை கிடையாது. தன்னம்பிக்கை கிடையாது. அப்படி இல்லாதவர்கள்தான் பெண்களை இழிவுபடுத்தி பேசுவார்கள்’ என்றார்.