சென்னை,
தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டது. இதனை மின் பகிர்மான கழகத்திலும் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்தது.
இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் இதுவரை ஓய்வு பெற்ற மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த தகுதி உள்ள மின்சாரத்துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பணிக்கொடைக்கும், உயர்த்தப்பட்ட உச்சவரம்புக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வருமான வரி விதிகளின்படி பணிக்கொடையில் ரூ.20 லட்சம் வரையிலான தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். அதற்கு மேல் வழங்கப்படும் தொகை வரிக்குட்பட்ட வருமானமாக கருதப்படும். கூடுதல் தொகைக்கான வருமான வரி பிடித்தம் செய்வதற்கான நடைமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும். இந்த சலுகை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.